கோபியில் பிப். 6-ல்  வேலைவாய்ப்பு முகாம் இணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

கோபியில் பிப். 6-ல் வேலைவாய்ப்பு முகாம் இணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

Published on

கோபியில் பிப்ரவரி 6-ம் தேதி நடக்கவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர், இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டுமென ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கோபி - சத்தியமங்கலம் சாலையில் கரட்டடிபாளையத்தில் அமைந்துள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 6-ம் தேதி நடக்கிறது.

முகாமில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவு, அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக சுயதொழில் செய்ய விரும்புவோருக்கான ஆலோசனைகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது விவரங்களை, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். முகாம் நடைபெறும் நாளன்று சுய விவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல் மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in