தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளது பாஜக மாநிலப் பார்வையாளர் கருத்து

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளது பாஜக  மாநிலப் பார்வையாளர் கருத்து
Updated on
1 min read

தமிழகத்தில் 234 சட்டப் பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மாநிலப் பார்வையாளருமான சி.டி.ரவி கூறினார்.

பாஜக சார்பில் திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சி.டி. ரவி பங்கேற்று தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி ரவி கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக நடத்திய வெற்றிவேல் யாத்திரை மற்றும் நம்ம ஊர் பொங்கல் விழா பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. மத்திய அரசு தமிழகத்துக்கு பலகோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.

தமிழகம் முழுவதும் 234 சட்டப் பேரவை தொகுதியிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது. வெற்றி நிலவரங்களை பொறுத்து ஏ,பி,சி என தொகுதிகளை மூன்றாகப் பிரித்துள்ளோம். இதில் ஏ பிரிவில் உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவுக்கு பலமாக உள்ளது. பி பிரிவில் இன்னும் கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. சி பிரிவில் பலவீனமாக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட பிறகு அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ஏ’ பிரிவில் என்னென்ன தொகுதிகள் இருக்கிறது என்று கேட்டதற்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். சசிகலா விடுதலையாவதால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்று கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். ராமேஸ்வரத்தில் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் உயிரிழந்த சம்பவத்தில் மீனவர்கள் கச்சத்தீவு வரை சென்று போராட்டம் நடத்த உள்ளது குறித்து கேட்டபோது, கச்சத்தீவு பிரச்சினைக்கு திமுக, காங்கிரஸ்தான் முழுப் பொறுப்பு என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in