

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் கடுமையான போராட்டங்களை அரசு சந்திக்கும் என முன்னாள் எம்எல்ஏ குண சேகரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான குணசேகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடர் மழை யால் தமிழகம் முழுவதும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், நிலக்கடலைக்கு ரூ.40 ஆயிரம், மிளகாய்க்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் கடுமையான போராட்டங்களை இந்த அரசு சந்திக்கும். மேலும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத் தன்று புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சிவகங்கையில் ஏராளமான விவசாயிகள் டிராக்டர், லாரிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த உள்ளனர், என்று அவர் கூறினார்.