

ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் 33 சதவீதத்துக்கு மேல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பயிர் சேதம் தொடர்பாக வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் ராமன் பேசியதாவது:
வேளாண் பணிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதை உள்ளிட்ட இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. ஜனவரி மாதத்தில் பெய்த பருவம் தவறிய மழை காரணமாக விவசாயிகளுக்கு 33 சதவீதத்துக்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்டது இதுதொடர்பாக வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் அனைவரும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை இடுபொருள்களான பஞ்சகவ்யம், தசகவ்யம், ஜீவாமிர்தம், திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் மற்றும் மண்புழு உரவடிகட்டி தயாரிக்கும் முறைகள் தொடர்பாக விவசாயிகளுக்கும் விவசாய குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ள தால் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் களை அணுக வேண்டும்.
வேளாண் பொறியியல் துறை மூலம் மின்வேலி அமைக்கும் திட்டம் மற்றும் விவசாய் பணிகளுக்கான இயந்திரங்களை வாடகைக்கு விடும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தாண்டு மழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால் மழைநீர் வீணாகாமல் தடுக்க ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் தூர்வாரி கரைகள் செம்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திரபிரசாத், இணை இயக்குநர் (வேளாண்) கணேசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.