ஏற்காடு படகு இல்லத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் 8 புதிய படகுகள் சுற்றுலாத் துறை நடவடிக்கை

ஏற்காடு படகு இல்லத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் 8 புதிய படகுகள்  சுற்றுலாத் துறை நடவடிக்கை
Updated on
1 min read

ஏற்காட்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் மாடி படகு உள்ளிட்ட 8 புதிய படகுகள் வாங்க சுற்றுலாத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஏற்காடு சேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5,326 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவும். இதனால், தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு ஆண்டு முழுவதும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இங்கு சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதியாக ஏற்கெனவே 4 மோட்டார் படகுகள், 48 கால் மிதி (பெடலிங்) படகுகள் உள்ளிட்ட 57 படகுகள் உள்ளன.

இருப்பினும், தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் வருகை அதிகரிக்கும்போது, படகு சவாரி செய்ய பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே, புதிதாக கூடுதல் படகுகள் வாங்க சுற்றுலாத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஊட்டி படகுக் குழாமில் பயணிகள் பயன்படுத்தும் மாடி போன்ற அமைப்பு உடைய பெரிய படகு ஒன்று மற்றும் மோட்டார் படகுகள், துடுப்புப் படகுகள், பெடலிங் படகுகள் என புதிதாக 8 படகுகள் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புனேவில் இருந்து ஒரு வாரத்துக்குள் புதிய படகுகள் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். ஏற்காடு ஏரி படகு குழாம் ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய படகுகள் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக் கும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in