Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
தாய், சேய் நலத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையானது கூடுதல் வசதிகளுடன் நேற்று திறக்கப்பட்டது. ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நவீன கருவிகளின் செயல்பாடுகளை தொடங்கி வைத்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
நாட்டின் பிற மாநிலங்களில் 30 சதவீத பிரசவங்களே அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. ஆனால், தமிழகத்தில் 62 சதவீதத்துக்கும் மேல் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இது தமிழக சுகாதார கட்டமைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
மேலும், கரோனா காலத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 6,460 கர்ப்பிணி களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு தாய் சேய் நலத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்ததன் படி 2030-ல் அடைய வேண்டிய தாய், சேய் நல இலக்கை 2021லேயே தமிழக சுகாதாரத்துறை அடைந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும் என்றார்.மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT