Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

ஜெயலலிதா இறப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தான் மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

புதுக்கோட்டை

ஜெயலலிதா இறப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் தான், மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, ‘‘முதல்வர் பெயரோடு சேர்த்து எடப்பாடி என்று ஊரின் பெயரையும் பயன்படுத்துவது ஊரை களங்கப்படுத்தும் விதமாக உள்ளது’’ எனக் கூறினர். எனவே, இனிமேல் நாம் முதல்வர் பெயருடன் எடப்பாடி என்ற ஊர் பெயரை பயன்படுத்த வேண்டாம்.

புதுக்கோட்டை புதிய மாவட்டமாக உருவானது. விராலிமலை முருகன் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்தியது. அன்னவாசல், இலுப்பூரில் அரசு மருத்துவமனைகள் என பல திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன.

முதல்வராக இருந்தபோது எம்ஜிஆர் இறந்தது குறித்து அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த ஹண்டேவும், அண்ணா குறித்து சாதிக்பாட்ஷாவும்தான் மக்களுக்கு அறிக்கை வெளியிட்டனர். அப்படியென்றால், ஜெயலலிதா இறப்பு குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தானே தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றார்.

முன்னதாக திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுகவின் 11-வது மாநில மாநாடு நடைபெற தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விளக்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் ந.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x