

பழநி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் கயிறு திரிக்கும் தொழில் நடத்துவதற்காக மின் இணைப்புக் கோரி, பழநி மின்வாரியத்தில் விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்பு தர ஏற்பாடு செய்வதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று பழநி உதவி மின் பொறியாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் நாகராஜன் புகார் தெரிவித்தார்.
பின்னர் நாகராஜனிடம் இருந்து ராஜேந்திரன் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையிலான போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொறுப்பு) செல்வக்குமார் தீர்ப்பளித்தார்.