

பெத்தநாயக்கன் பாளையத்தை அடுத்த கருமந்துறை அரசு தோட்டக்கலை பண்ணையில் ஜாம், பழச்சாறு மற்றும் ஊறுகாய் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கருமந்துறை மலைக் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 ஏக்கரில் அரசு பண்ணை உள்ளது. இங்கு மா, கொய்யா, பப்பாளி, நெல்லி உள்ளிட்ட பழச்செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், தென்னங்கன்றுகள், மூலிகைச் செடிகள் மற்றும் பல்வேறு வகையான அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விளைபயிர்களில் அறுவடைக்கு பின்னர் ஏற்படும் சேதாரத்தைதவிர்க்கவும் மற்றும் விளைவிக்கப்பட்ட பழங்களை மதிப்பு கூட்டவும் தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய பழம் பதனிடும் நிலையம் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பண்ணையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் சத்யா, கருமந்துறை உதவி இயக்குநர் சக்ரவர்த்தி ஆகியோர் கூட்டாக கூறியதாவது:
அரசுப் பண்ணையில் விளையும் பழங்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பழங்களில் மதிப்பு கூட்டப்பட்ட ஜாம், குளிர்பானம், ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஜாம் மற்றும் ஊறுகாய் 300, 500 கிராமும், பழச்சாறு 750 மில்லி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இவை அரசுப் பண்ணை மற்றும் சேலம் சூரமங்கலத்தில் உள்ள தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டான்ஹோடா) விற்பனை நிலையம், ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
விரைவில், அனைத்து வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விற்பனைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் அறிய கருமந்துறை தோட்டக்கலை உதவி இயக்குநர் (பண்ணைகள்) 98844 02623 மற்றும் தோட்டக்கலை அலுவலர் 97514 09460 ஆகியோரின் செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.