நெல்லை மாவட்டத்தில் மழைக்கு 63 வீடுகள் இடிந்தன தாமிரபரணியில் வெள்ளம் குறைகிறது

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் நேற்று 8-வது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. சுத்தமல்லியில்  உள்ள தடுப்பணையை தாண்டி ஆற்றில் தண்ணீர் பாய்கிறது. (வலது) தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேரன்மகாதேவி அருகே சங்கன்திரடு பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் மூழ்கின.படங்கள்: மு.லெட்சுமி அருண்
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் நேற்று 8-வது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. சுத்தமல்லியில் உள்ள தடுப்பணையை தாண்டி ஆற்றில் தண்ணீர் பாய்கிறது. (வலது) தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேரன்மகாதேவி அருகே சங்கன்திரடு பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் மூழ்கின.படங்கள்: மு.லெட்சுமி அருண்
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக நீடித்த மழைக்கு இதுவரை 63 வீடுகள் இடிந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக அணைப் பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடித்தது. மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, நம்பியாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்துவருகிறது. அணைகளில் இருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆற்றில் வெள்ளம் குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து 8,077 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 6,172 கனஅடி தண்ணீர் தாமிபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மாவட்டத்தில் அணைப்பகுதி களிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 15, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 14.2, நம்பியாறு- 1, கொடுமுடியாறு- 5, அம்பா சமுத்திரம்- 12.40, சேரன்மகாதேவி- 5, நாங்குநேரி- 1, ராதாபுரம்- 7, பாளையங்கோட்டை- 10, திருநெல் வேலி- 3.50.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7,819 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 8,077 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.11 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,044 கனஅடி தண்ணீர் வந்தது. 6,172 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு அணையில் நீர் மட்டம் முழு கொள்ளைவை எட்டியுள்ளதை அடுத்து அணைக்கு வரும் 943 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணையும் நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் 276 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 38.75 அடியாக இருந்தது. அணைக்கு 86 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளைநிலங்களை மூழ்கடித்த தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. தொடர் மழைக்கு மாவட்டத்தில் இதுவரை 42 வீடுகள் முழுமையாகவும், 21 வீடுகள் பகுதியளவும் என மொத்தம் 63 வீடுகள் இடிந்துள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 205 பேர் 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி

கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் இவற்றுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 1,505 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 259 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 664 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 87 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 92.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 60 கனஅடி நீர் வந்தது. 15 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று (17-ம் தேதி) வரை தடை உள்ளதால் மக்கள் வருகையின்றி அருவிப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in