

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 109 அடியை கடந்தது.
தி.மலை மாவட்டம் வழியாக செல்லும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப் பட்டுள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம், கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி 100 அடியை எட்டியது. அதன் பிறகு மழையின் தாக்கம் குறைந்த தால், 14 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ம் தேதி 1 அடி மட்டுமே நிரம்பியது.
இந்நிலையில் தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 960 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் 109.15 அடியாக உள்ளது. அணையில் 5,274 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.
60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 48.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 7.64 கனஅடி தண்ணீர் வருகிறது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக 58 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.