

விபத்துகளைத் தடுக்கும் வகையில், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தைப்பூச தினத்தன்று முருகனை வழிபடுவதற்காக, பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்குச் சென்று வருகின்றனர். இந்த ஆண்டு 28-ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படும் நிலையில், விரதமிருந்த பக்தர்கள், பழநியை நோக்கி பாதயாத்திரையாகச் செல்லத் தொடங்கியுள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, தன்னார்வலர்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து சென்னிமலை வழியாகவும், அறச்சலூர் வழியாகவும் பழநி செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், கார், பேருந்து மற்றும் கனரக வாகனங்களை இயக்குவோர் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படுவதைத் தடுக்க, காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பக்தர்கள் கூறியதாவது:
பக்தர்கள் கூட்டமாக செல்லும் சாலைகளில், தனியாக ரோந்து வாகனம் மூலம் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். பக்தர்கள் பாதயாத்திரை செல்வதால், வேகத்தை குறைத்து கவனத்துடன் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு பேனர்கள் மற்றும் முக்கிய இடங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும். பெரும்பாலான பக்தர்கள் இரவு நேரத்தில் பாதயாத்திரை செல்வதால், கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போல், அவர்களுக்கு ஒளிரும் பட்டைகளை காவல்துறையினர் வழங்க வேண்டும் என்றனர்.