சேலம் மாவட்டத்தில் 17-ம் தேதி வரை வனத்துறை சுற்றுலாத் தலங்கள், மேட்டூர் பூங்கா மூடல்

சேலம் மாவட்டத்தில் 17-ம் தேதி வரை  வனத்துறை சுற்றுலாத் தலங்கள், மேட்டூர் பூங்கா மூடல்
Updated on
1 min read

புத்தாண்டு நாளில் மூடப்பட்டது போல, பொங்கல் பண்டிகையின்போது ஏற்காடு சுற்றுலாத் தலம் மூடப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு வருகையைத் தவிர்த்தனர். எனினும், மாவட்டத்தில் வனத்துறை சுற்றுலாத் தலங்கள், மேட்டூர் அணைப் பூங்கா ஆகியவை 17-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க, 2021-ம் ஆண்டு பிறப்பின்போது, சுற்றுலாத் தலங்கள் இரு நாட்களுக்கு மூடப்பட்டன. சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, மேட்டூர் அணைப் பூங்கா, ஆனைவாரி முட்டல் அருவி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்தது. எனவே, சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவர திட்டமிட்டிருந்தனர். ஆனால், சேலம் மாவட்டத்தில் வனத்துறை சுற்றுலாத் தலங்களான குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆனைவாரி முட்டல் அருவி, கரடியூர் சூழல் சுற்றுலா, ஏற்காடு மான் பூங்கா ஆகியவை 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல், கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மேட்டூர் அணைப் பூங்காவிலும், 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அணை நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே, ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலைத்துறை பூங்காக்கள், காட்சி முனைப் பகுதிகள், ஏற்காடு ஏரி படகுக் குழாம் உள்ளிட்டவையும் மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ஏற்காடு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டிருக்கும் அல்லது மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த முறையான அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் அல்லது சுற்றுலாத் துறை சார்பில் வெளியிடப்படவில்லை.

இதனால், சேலம் மற்றும் அண்டை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்காடு வந்து செல்வதில் முடிவெடுக்க முடியாமல் குழம்பினர். எனவே, ஏற்காட்டில், தோட்டக்கலைத்துறை பூங்காக்கள், ஏற்காடு ஏரி படகு குழாம் உள்ளிட்ட ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in