

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் நேற்று பிற்பகல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மங்களேஸ்வரி (58) என்பவரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.35,000, ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் பாலு (68) என்பவரிடம் இருந்து ரூ.15,000 கைப்பற்றப்பட்டது.
ஓய்வுபெற்ற அலுவலரான பாலு, ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளர் கோகுலகண்ணனுக்காக பணத்தை வாங்கி வைத்திருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பணம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்ற லஞ்சப் பணமாக இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி, உதவிப்பொறியாளர் கோகுலகண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.