

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 600 உழவர் ஆர்வலர் குழுக்கள், 120 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தோட்டக்கலைத் துறை மூலம் 360 உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் 72 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவுக்கும் தொகுப்பு நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.9.60 கோடி மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. 2020-21-ம் ஆண்டு 335 உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் 67 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுப்பு நிதியாக ரூ.3.35 கோடி மதிப்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.
தொடர்ந்து பண்ணை இயந்திரங்கள் செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இதில் 12 நிறுவனங்கள் தங்கள் பண்ணை இயந்திரங்களை காட்சிப்படுத்தினர். இவற்றை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பார்வையிட்டார். அப்போது இயந்திரங்களின் விலை மற்றும் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண் இணை இயக்குநர் பொ.அசோகன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கே.கணேசன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பி.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.