

சேலம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளி களிடம் உபகரணத்தை விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டயாலிசிஸ் ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இங்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், டயாலிசிஸ் செய்யவருபவர்களிடம் புரடெக்டர் உபகரணத்தை வெளியில் இருந்து வாங்கி வரும்படி மருத்துவ பணியாளர்கள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்தது. மேலும், மருத்துவமனையில் உள்ள புரடெக்டர் உபகரணத்தை முறைகேடாக தனிநபர் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் விசாரணை நடத்தினார். விசாரணையில், ரத்த சுத்திகரிப்பு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நந்தகுமார் என்பவர், வெளிநபருடன் சேர்ந்து உபகரணங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்து டீன் உத்தரவிட்டார்.