Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

தொடர் மழைக்கு மத்தியிலும் சந்தைகளில் குவிந்த மக்கள் பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி நெல்லை, தூத்துக்குடியில் கடும் விலை உயர்வு

திருநெல்வேலியில் பொங்கலை யொட்டி காய்கறிகள், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

தொடர் மழையிலும் காய்கறிகள், பூக்கள், கோலப்பொடி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். பாளையங்கோட்டை சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்திரு ந்தாலும், கிழங்கு வகைகளின் விலை கடந்த ஆண்டைப்போலவே இருந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். 25 எண்ணம் கொண்ட பனங்கிழங்கு கட்டு ரூ.100-க்கும், சிறு கிழங்கு, வள்ளி கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகள் கிலோ ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.45, சேம்பு- ரூ.60-க்கு விற்பனையானது. கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், பல்லாரி, தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்வாக இருந்தது.

பல வண்ண கோலப்பொடி பாக்கெட்டுகள் தலா ரூ.10 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் குலை ஒரு எண்ணம் ரூ.20 முதல் ரூ50 வரை விற்பனையாகிறது.

பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை கடந்த சில நாட்களைவிட நேற்று உயர்ந்திருந்தது. கேந்தி கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.120-க்கும், செவ்வந்தி 240-ல் இருந்து 250-க்கும், ரோஜா 280-ல் இருந்து 320-க்கும் விற்கப்பட்டது. மல்லிகை ரூ.3 ஆயிரம், பிச்சிப்பூ ரூ.1,500 ஆகவும் இருந்தது. விலை இன்று மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம் சந்தையில் தொடர் மழையால் வியாபாரம் மந்தமான நிலையில் வரத்து அதிகரிப்பால் பெரும்பாலான காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ வள்ளிக்கிழங்கு ரூ.40-க்கு மேல் விற்ற நிலையில் தற்போது 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. பிடி கிழங்கு 30-க்கு விற்பனையாகிறது.

கேரட் 20 ரூபாயாக உள்ளது. மழையில் நனைந்து சேதமடைந்ததால் சின்ன வெங்காயம் ரூ.7 முதல் 8-க்கு விற்பனையாகிறது. நல்ல தரமான சின்ன வெங்காயம் ரூ.50-க்கு விற்பனையாகிறது.

கத்தரிக்காய் ரூ. 40 முதல் 50 வரை, சேனைக்கிழங்கு 10 முதல் 15 வரை, தக்காளி 10 முதல் 12 வரை, மாங்காய் 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. மிளகாய் 15, வெண்டைக்காய் 30, சீனிஅவரைக்காய் 10, புடலங்காய் 10, பெரிய வெங்காயம் ரூ.30 முதல் 40 வரை, உருளைக்கிழங்கு 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகிறது.

தூத்துக்குடி

தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் நேற்று விலை உயர்ந்து காணப்பட்டது.

ஆத்தூர், குரும்பூர், சேரன்மகாதேவி, சத்தியமங்கலம், தேனி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 210 டன் வாழைத்தார்கள் தூத்துக்குடி காமராஜ் காய்கறி மொத்த சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளன.

வழக்கமாக 500 டன் வரை வாழைத்தார்கள் வரும். ஆனால், இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக தோட்டங்களில் வாழைத்தார்களை வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்தும், வியாபாரமும் மந்தமாகவே உள்ளது. இருப்பினும் விலை அதிகரித்தது. நாட்டு வாழைத்தார் ரூ.400 முதல் 450, கற்பூரவல்லி ரூ.450, சக்கை ரூ.250 முதல் 300, கதலி ரூ. 300, கோழிக்கூடு ரூ.600, செவ்வாழை ரூ.700, பூலாச்சுண்டான் 600, ஏத்தன் ரூ.300-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டன.

கரும்புக் கட்டுகள் மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற பகுதிகளில் இருந்து வந்து குவிந்துள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்கப்பட்டது. ஒரு தனிக்கரும்பு தரத்தை பொறுத்து ரூ. 30 முதல் 50 வரை விற்கப்பட்டது.

சாயர்புரம் அருகேயுள்ள சக்கம்மாள்புரம், சேர்வைக்காரன் மடம், செபத்தையாபுரம் பகுதிகளில் இருந்து மஞ்சள் குலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு மஞ்சள் குலை ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனை செய்யப்பட்டது.

திருச்செந்தூர், மணப்பாடு, உடன்குடி, வேம்பார் மற்றும் ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து பனங்கிழங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. 25 கிழங்குகளை கொண்ட கட்டு ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டன.

கத்தரிக்காய் கிலோ ரூ.80-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.150-க்கும் விற்பனையானது. தக்காளி ரூ.25, மிளகாய் ரூ.30, அவரை ரூ.60, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.30, சவ்சவ் ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.30, சிறுகிழங்கு ரூ.50, கருணைக்கிழங்கு ரூ.40, சேம்பு ரூ.50, சின்னவெங்காயம் ரூ.60 முதல் ரூ.80, பல்லாரி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர் மழை காரணமாக சந்தைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதேபோல் பொங்கல் வைப்பதற்கான மண் பானை, அடுப்பு கட்டி, பனை ஓலை போன்ற பொருட்களின் விற்பனையும் மந்தமாகவே இருந்தது.

போக்குவரத்து மாற்றம்

பொங்கல் விற்பனையை தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் காய்கறி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x