Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

வங்கிக் கடன் தொடர்பாக தவறான தகவல் பரப்பும் அறக்கட்டளை மீது நடவடிக்கை கோரி சேலம் ஆட்சியரிடம் மனு

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரளாக வந்த மகளிர் சுய உதவிக்குழுவினர். படம்:எஸ். குரு பிரசாத்

சேலம்

வங்கிக் கடன் தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் தவறான தகவலை பரப்பும் அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 500 பெண்கள் நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க 5 பேர் மட்டும் செல்ல அனுமதியளித்தனர்.

இதையடுத்து, சேலம் முல்லை மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனு விவரம்:

அயோத்தியாப்பட்டணத்தை தலைமையிடமாக கொண்டு முல்லை வட்டார களஞ்சியம் தொண்டு நிறுவனம் கடந்த 21 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் கீழ் 510 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன.

தொடக்கத்தில் மதுரை தானம் அறக்கட்டளை வழிகாட்டுதல் படி முல்லை வட்டார களஞ்சியம் இயங்கி வந்தது. அறக்கட்டளையின் செயல்பாடுகள் சுய உதவிக்குழுவுக்கு எதிராக மாறியதை தொடர்ந்து முல்லை வட்டார களஞ்சியம் தனித்து இயங்கி வருகிறது.

இந்நிலையில், முல்லை வட்டார களஞ்சியத்துக்கு சொந்தமான அலுவலகத்தை தானம் அறக்கட்டளை சொந்தம் கொண்டாடி அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல, கிராமப்புறங்களுக்கு சென்று மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டாம் என தவறான பிரச்சாரம் செய்து வருகிறது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x