மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ராஷ்டிரிய உலமா கவுன்சில் சார்பில் வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். படம்:வி.எம்.மணிநாதன்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ராஷ்டிரிய உலமா கவுன்சில் சார்பில் வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். படம்:வி.எம்.மணிநாதன்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது

Published on

வேலூரில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மக்கான் சிக்னல் அருகே 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராஷ்டிரிய உலமா கவுன்சில் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஷரிப் பாஷா தலைமையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும், புதுடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர்.

இதில், மாநிலத் தலைவர் கலிலுல்லா ரஷாதி, மாநிலப் பொருளாளர் ரஃபி, மாநில பொதுச்செயலாளர் அக்பர் பாஷா காதிரி, மாநில அமைப்பு செயலாளர் பல்லாவரம் காதர்பாஷா, மாநில தலைமை நிலைய செயலாளர் முகமது அலி, தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பேச்சாளர் லியாக்கத்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். காவல் துறையைினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மறியலின்போது மக்கான் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது தாயும், மகனும் வந்த இரு சக்கர வாகனம் ஒன்றின்மீது பேருந்து மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக இருவரும் வாகனத்தில் இருந்து குதித்து தப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in