Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

‘புகையில்லா போகி கொண்டாடுவோம்’

திருவண்ணாமலை: புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முன்பாக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவை இல்லாத பொருட்களை எரித்து ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற அடிப்படையில் கொண்டாடப்பட்டது. ஆனால், இப்போது பழைய பொருட்கள் எனக் கூறி பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரித்த துணிகள், ரப்பர் பொருட்கள், டயர், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகிறது.

இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களாங் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புகையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகிறது. விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகி கொண்டாடுவோம், சுற்றுச் சூழலை பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x