

சேலம் அரியானூரில் ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
சேலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அரியானூரில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் அடிக்கடி வாகன விபத்து நடந்து வந்தது. இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில், அரியானூரில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பாலப்பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவுற்றது. இதற்கான திறப்பு விழா நேற்று காலை அரியானூரில் நடந்தது.
பாலத்தை சென்னையில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன், வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ மனோன்மணி, தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்ட பொறியாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.