

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பெண் பயனாளிகளிடம் இருந்து பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கமும், பணித்தள பொறுப்பாளர் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.
பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டி ஊராட்சியில் 134 பேருக்கு அரசின் விலையில்லா வெள்ளாடுகள் இரு தினங்களுக்கு முன்பு கொன்னையூர் சந்தையில் வழங்கப்பட்டன.
இதற்காக ஒவ்வொரு பயனாளி யிடம் இருந்தும் ரூ.2,000 வீதம் ஊராட்சி பணியாளர்கள் வசூலித்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, ஊராட்சி செயலாளர் சின்னக்காளையை பணியிடை நீக்கமும், பணித்தள பொறுப்பாளர் முருகேசனை பணிநீக்கமும் செய்து மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும், இவர்கள் மீது காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இப்பணியை முறையாக கண்காணிக்கத் தவறிய வட்டார கால்நடை மருத்துவர் சீனிவாசன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.