

தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என, பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் எம்.பிரம்மநாயகம், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூருவுக்கு மட்டும் தற்போது ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற ரயில்களான பகல் நேர சென்னை மற்றும் இரவு நேர கோவை இணைப்பு (லிங்க்) விரைவு ரயில்களும், திருநெல்வேலி, திருச்செந்தூர் பகுதிகளுக்கான பயணிகள் ரயில்களும் மீண்டும் இயக்கப்படவில்லை.
மேலும், தூத்துக்குடியில் இருந்து பகல் நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்பட்ட பகல்நேர இன்டர்சிட்டி ரயிலும் தற்போது இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மீண்டும் வழக்கம்போல் இந்த ரயில்களை இயக்க வேண்டும். மேலும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.