மேட்டூர் அணை நீர்தேக்கப்பகுதியில் படரும் பாசிப்படலம் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றச்சாட்டு

மேட்டூர் அணையின் தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள கோவிந்தபாடி அணை நீர்தேக்கப்பகுதியில் ஆங்காங்கே மிதக்கும் பாசிப்படலம்.
மேட்டூர் அணையின் தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள கோவிந்தபாடி அணை நீர்தேக்கப்பகுதியில் ஆங்காங்கே மிதக்கும் பாசிப்படலம்.
Updated on
1 min read

மேட்டூர் அணை நீர் தேக்கப்பகுதி யில் பாசிப்படலம் படர்ந்து வருவ தால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பரப்பு 59.29 சதுர மைல் பரந்து விரிந்துள்ளது. மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது, 105 அடி உயரத்துக்கு நீர் தேங்கியுள்ளது. அணை நீர்மட்டம் உயருவதற்கு முன்னர் அணையின் கரையோரப் பகுதிகள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் அப்பகுதி மக்கள் விவசாயம் மேற்கொள்வது வழக்கம். நீர்மட்டம் உயரத் தொடங்கும்போது, பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்துவிடுவர். எனினும், அறுவடை எச்சங்கள் நீரில் மூழ்கிவிடும். நீரில் மூழ்கிய எச்சங்கள் தற்போது அணை நீரின் மேற்பரப்பில் வெளிவந்து பாசிப்படலமாக படர்ந்து வருகிறது. குறிப்பாக அணையின் நீர் தேக்கப்பகுதிகளான கோட்டையூர், பண்ணவாடி, தானமூர்த்திகாடு, தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சேத்துக்குளி, கோவிந்தபாடி ஆகிய பகுதியில் உள்ள நீர்தேக்கப்பகுதி யில் ஆங்காங்கே திட்டு திட்டாக பாசிப்படலம் காணப்படுகிறது.

அணையின் மதகு பகுதி வரை படர்ந்துள்ள பாசிப்படலத்தை பொதுப்பணித்துறை, வேளாண் துறை, மீன் வளத்துறையினர் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக காவிரி கரையோரப் பகுதி கிராம மக்கள் கூறியதாவது:

அணையில் 100 அடிக்கு மேல் நீர் தேங்கியுள்ளதால், நீர்த்தேக்கப் பகுதிகளில் பாசிப்படலம் தொடர்ந்து உருவாகி வருகிறது. இவை, அணை பரப்பின் தமிழக- கர்நாடக எல்லை வரை பரந்து காணப்படுகிறது.

இதனால், கரையோரப் பகுதிகள் பச்சை வண்ணம் பூசியதுபோல காணப்படுகிறது. இவற்றால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதுமில்லை. ஆனால், பாசிப்படலத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. நீர்மட்டம் உயரும் போதெல்லாம் இதுபோன்ற பிரச்சினை எழுவது வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in