

பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சேலம் திரும்பியவர்களுக்கு பரிசோதனை மூலம் உருமாறிய புதியவகை கரோனா தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனையில் 29 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு (2020) மார்ச் மாதத்தில் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டது. தற்போது 650 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. இதில், 150 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டனில் உருமாறிய புதியவகை கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர். எனவே, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்தவர்களுக்கு கரோனா தொற்று அல்லது உருமாறிய வைரஸ் பாதிப்பு உள்ளதா? என மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிற வெளிநாடுகளில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு திரும்பிய 1,456 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 77 பேர்களில் 4 பேர் மீண்டும் பிரிட்டனுக்கும், 2 பேர் வெளி மாவட்டங்களுக்கும் சென்றுவிட்டனர். மீதமுள்ள 71 பேருக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து சேலம் வந்துள்ளவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை மற்ற கரோனா நோயாளிகள் உள்ள வார்டில் சிகிச்சை அளிப்பதை தவிர்க்க சிறப்பு சிகிச்சை வார்டு 29 படுக்கைகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.