தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சேலத்தில் ஜன. 2-ம் தேதி இலவச மருத்துவ முகாம் மூலிகை கண்காட்சி, உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி  சேலத்தில் ஜன. 2-ம் தேதி இலவச மருத்துவ முகாம்  மூலிகை கண்காட்சி, உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு
Updated on
1 min read

தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, சேலத்தில் வரும் 2-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி, பாரம்பரிய உணவு திருவிழா நடக்கவுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து சித்த மருத்துவர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி ஆகியவை இணைந்து 2-ம் தேதி சேலம் அம்மாப்பேட்டை அய்யாசாமி பசுமை பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கோ.செல்வமூர்த்தி கூறியதாவது:

சித்தர்களில் முதன்மையான வராக குறிப்பிடப்படும் அகத்திய முனிவர் அவதரித்த மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாளை மத்திய, மாநில அரசுகள் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி, வரும் 2-ம் தேதி சேலம் அம்மாப்பேட்டை அய்யாசாமி பசுமை பூங்காவில் இலவச சித்த மருத்துவ முகாம் நடக்கிறது.

முகாமின்போது, சித்த மருத்துவர்கள், இலவசமாக மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கவுள்ளனர். மேலும், மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ள வசதியாக, எளிதில் கிடைக்கும் மூலிகைகள் தொடங்கி அரிய வகை மூலிகைகள் வரை அனைத்தும் அடங்கிய பாரம்பரிய மூலிகைக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

மேலும், சித்த மருத்துவம், பாரம்பரிய மூலிகை, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவை தொடர்பான தகவல்கள் அடங்கிய ஏராளமான புத்தகங்கள் கொண்ட புத்தகக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முகாமுக்கு வருபவர்களுக்கு பாரம்பரிய உணவு வகைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பாரம்பரிய உணவு திருவிழாவும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in