அதிமுக ஆட்சியில் அனைத்து பணிகளிலும் ஊழல் கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் அனைத்து பணிகளிலும் ஊழல் கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
Updated on
1 min read

“அதிமுக ஆட்சியில் அனைத்து பணிகளிலும் ஊழல் நடக்கிறது” என, கனிமொழி எம்.பி., குற்றம்சாட்டினார்.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தென்காசி மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டார். தென்காசியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர் ராமசாமி இல்லத்துக்கு நேற்று சென்று, அவரை வாழ்த்தினார். தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் அப்துல் சலாம் நினைவுத் தூணுக்கு அடிக்கல் நாட்டினார். குலையநேரியில் பீடித் தொழிலாளர்களுடன் கலந் துரையாடினார். சங்கரன்கோவிலில் விசைத்தறி, கைத்தறிக் கூடங்களில் நெசவாளர்களுடன் கலந்துரை யாடினார். சுரண்டையில் மாற்றுத்திறனாளிகள், வில்லிசைக் கலைஞர்கள், கீழப்பாவூரில் கிரிக்கெட், கபடி வீரர்களை சந்தித்து பேசினார். திப்பணம் பட்டியில் மக்கள் சபை கூட்டம், ஆலங்குளத்தில் மக்களிடம் குறை கேட்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மேலகரத்தில் கனிமொழி எம்.பி., பேசும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மக்கள் அதிமுகவை நிராகரிக்க தயாராகிவிட்டனர்” என்றார்.

குலையநேரியில் மக்கள் சபை கூட்டத்தில் பேசும்போது, “குலைய நேரியில் உள்ள பள்ளிக்கூடம் திமுக ஆட்சியில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.

திமுக ஆட்சியில் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டு, இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதிமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளது. அனைத்து பணிகளிலும் ஊழல் நடக்கிறது. தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல அதிமுகவை நிராகரிக்க வேண்டும்” என்றார்.

மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், தனுஷ் எம்.குமார் எம்.பி., பூங்கோதை எம்எல்ஏ, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி சங்குகிருஷ்ணன், ஆவுடையானூர் பரணி டி.பொன்ராஜ், திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் பொதிகை எஸ்.மசூது மீரான் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in