

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சிஐடியு) வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் காசி தலைமை வகித்தார்.
சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் நாராயணன் முன்னிலை வகித்தார். இதில், பல்வேறு அரசுத் துறைகளை தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும். அமைப்புச்சாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு கரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும்.
அனைவருக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் வேண்டும். புதுடெல்லி யில் கடந்த ஒரு மாதத்தை கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாநகர தொழிற்சங்க கன்வீனர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.