

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த சேவுகமூர்த்தி மனைவி வெயிலா (60) உள்ளிட்ட பலர் விருதுநகர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். அதில் மூதாட்டி வெயிலா குறிப்பிட்டுள்ளதாவது: சத்திரரெட்டியபட்டியில் குணசேகரன் (35) என்பவர் தவிட்டுக் கடை நடத்தி வந்தார். அதன் மூலம் ஏலச்சீட்டு நடத்துவதாகவும் முதலில் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி நானும் எங்கள் ஊரைச் சேர்ந்த 13 பேரும் ரூ.1 லட்சம் செலுத்தினேம். ஆனால், பணம் கட்டி முடித்தும் பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் 6 மாதங்களாக ஏமாற்றி வந்தார்.
இதேபோல், இடம் வாங்கித் தருவதாகக் கூறியும், கடை அமைத்துக் கொடுப்பதாகக் கூறியும் பலரிடமும் லட்சக் கணக்கில் குணசேகரன் வசூல் செய்துள்ளார். தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதுபோன்று பலரிடம் ரூ.38 லட்சம் வரை முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று குணசேகரனிடம் பணம் கொடுத்து ஏமாந்த சத்திரரெட்டிய பட்டியைச் சேர்ந்த தங்கமாரி, மாரியப்பன், திருப்பதி கண்ணன், சௌந்தர்ராஜன், பிரகாஷ், சுந்தர் உள்ளிட்டோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.