குண்டாறு அணையில் மூழ்கி இளைஞர் மரணம்

குண்டாறு அணையில் மூழ்கி இளைஞர் மரணம்

Published on

விருதுநகர் மாவட்டம் சுப்பையாபுரத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரது மகன் முத்துக்குமார்(33). இவர், தனது நண்பர்கள் சிலருடன் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார். விடுதியில் அறை எடுத்து தங்கி, பல்வேறு இடங்களுக்கு சென்றனர். நேற்று முன்தினம் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைக்குச் சென்று குளித்தனர். அப்போது முத்துக்குமார் தண்ணீரில் மூழ்கினார். செங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் குண்டாறு அணைப் பகுதியில் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், முத்துக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். செங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைப் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடை உத்தரவை மீறி இளைஞர்கள் அணையில் குளிப்பதும், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் நடந்துசென்று செல்ஃபி எடுத்தும், வீடியோ பதிவு செய்தும் சமூக வலைதளங்களில் பதிவது என விதிகளை மீறுகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு சிறுவன் குண்டாறு அணையில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அணையில் பொதுமக்கள் குளிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், அணையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in