

மதுரை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 பணம் வழங்குவதற்காக குடும்ப அட்டைதாரர் களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் 1,390 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 9,22,782 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரிசி கார்டுகள் மட்டும் 9 லட்சத்துக்கு மேல் உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 பணமும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகின்றன. கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் வந்து வாங்கிச் செல்லும் வகையில் டோக்கன் வழங்கப் படுகின்றன.
மதுரை மாநகர் மற்றும் கிராமப் புறங்களிலும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று நேற்று முதல் டோக்கன் விநியோகித்து வருகின்றனர். கோரிப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகித்தனர். டோக்கன் விநியோகிக்கும் பணி முடிந்தவுடன் ஜனவரி 4-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.