

சேலம் அரசு மருத்துவமனை யில் ஒப்பந்த அடிப்படையில் கரோனா தடுப்பு செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
கரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தபோது, எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் சேர்ந்தோம். இதற்காக, ஏற்கெனவே இருந்த பணியை விட்டு விட்டு வந்தோம். மேலும், கரோனா தொற்று காலத்தில் குடும்பத்தினரை பிரிந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பணிபுரிந்தோம்.
ஒப்பந்த காலம் முடிந்ததால் பணியில் இருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். கரோனா கால மருத்துவ சேவையை அங்கீகரித்து, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.