மழையால் மகசூல் பாதிப்பு மக்காச் சோளத்தை அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

ஆத்தூர் அடுத்த தேவியாக்குறிச்சியில் சேலம்- உளுந்தூர்பேட்டை  4 வழிச்சாலையோரம்   மக்காச் சோளத்தை உலர வைத்துள்ள விவசாயி.
ஆத்தூர் அடுத்த தேவியாக்குறிச்சியில் சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையோரம் மக்காச் சோளத்தை உலர வைத்துள்ள விவசாயி.
Updated on
1 min read

தொடர் மழையால் மக்காச் சோளம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்காச் சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மக்காச் சோளம் அறுவடை பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் இந்தாண்டு மக்காச் சோளம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலையும் குறைந்துள்ள தாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததை வைத்து மக்காச் சோளம் பயிரிட்டோம். வட கிழக்குப் பருவமழை பல இடங்களில் கனமழையாக பெய்தது. இந்த மழையால் மக்காச் சோளம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 60 மூட்டை விதைகள் கிடைக்கும். ஆனால், தற்போது 40 மூட்டை தான் கிடைத்துள்ளது.

மேலும், மக்காச் சோளம் மூட்டைக்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விலை கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஒரு மூட்டை ரூ.1,800 வரை விலைபோனது. தமிழகத்தில் ஏராளமான விவசாயிகள் மானாவாரியாகவும், இரவையாகவும் மக்காச் சோளம் பயிரிட்டுள்ளனர்.

கோழித் தீவனம், மாட்டுத் தீவனம், உணவுப்பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றுக்கு மக்காச்சோளம் மிகவும் அவசியமாக உள்ளது. மக்காச் சோளம் மகசூல் பாதிப்பு, விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நலன்கருதி, மக்காச் சோளத்துக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in