

புலம் பெயர்ந்து அயல்நாடுகள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக, மேடைத்தமிழில் பேசுதல் குறித்த புதிய பயிற்சிப் படிப்பு தொடங்கப்பட உள்ளதாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
`வணக்கம் மலேசியா' ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர் மையத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுமாணவர்களுக்கான பேச்சுப்போட் டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டியின் நேரலைத் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தர் பாலசுப்ரமணியன் பேசியது:
ஒருமொழி, உயிர்ப்புடன் தலைமுறைகளைக் கடந்து வாழவேண்டும் என்றால், அம்மொழி, பேச்சுவழக்கில் பயன் படுத்தப்பட வேண்டும். நல்ல மேடைத்தமிழ்ப் பேச்சு பலருக்கும் அன்றாட வாழ்வில் மொழியைப் பயன்படுத்துவதற்கு உந்துதலாக அமையும். மேடைத் தமிழை ஆற்றலுடன் வெளிப்படுத்த பல நுணுக்கங்கள் தேவைப் படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, புலம் பெயர்ந்து அயல்நாடுகள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக மேடையில் பேசும் கலையைப் பயிற்றுவிக்கும் படிப்பை தொடங்க முடிவெடுத்துள் ளோம். இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ள, சான்றிதழ் நிலை அளவிலான இப்படிப்பு சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களைக் கொண்டு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.