Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

நெல்லை பல்கலை.யில் முறைகேடு மானியக்குழு பதிலளிக்க உத்தரவு

மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கான நிதியில் முறைகேடு நடந்ததாக விசாரிக்கக் கோரிய மனுவுக்கு பல்கலைக்கழக மானியக்குழு, ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த ஆல்பர்ட் டைட்டஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வுப் படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் முறைகேடு நடக்கிறது. பிஎச்டி படிப்பில் ஒரு கட்டுரை சமர்ப்பிக்க குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். ஆனால், பேராசிரியர் ஒருவர் ஒரே ஆண்டில் 13 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து முதுநிலை விஞ்ஞானி பட்டம் பெற்றுள்ளார்.

கூகுள் மற்றும் புத்தகங்களை வைத்து ஆய்வுக் கட்டுரையை முடிக்கின்றனர். இவ்வாறு பிஎச்டி படிப்புக்கான மானியத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். ரூ.1.20 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கான நிதியில் முறைகேடு நடந்தது தொடர்பாக ஒரு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர், ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 21-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x