

அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசியதில் பெண் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.
ஏழு உட் பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் ஆத ரவு அளிப்பதாகவும், அவரைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்ய வஉசி பேரவையினர் போலீ ஸாரிடம் அனுமதி பெற்றிருந்தனர்.
அலங்காநல்லூர் கேட்டுக்கடை யில் வஉசி பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த விஜயகுமார் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்தும், மாணிக்கம் எம்எல்ஏ வுக்கு ஆதரவாகவும் திடீரென முழக்கமிட்டனர்.அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. புதிய தமிழகம் கட்சியினரை அங்கிருந்து செல்லுமாறு போலீஸார் கூறினர். ஆனால், அவர்கள் போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஒருவர், வஉசி பேரவை யினர் மீது திடீரென கல் வீசியதில் பெண் ஒருவர் காயமடைந்தார். இதைக் கண்டித்து வஉசி பேரவையினர் சாலை மறியல் செய்தனர்.வாடிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அங்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
வஉசி பேரவையினர் கொடுத்த புகாரின் பேரில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி விஜயகுமார் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.