

வேளாளர் என்ற பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் கொமதேகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 7 சமுதாயப் பிரிவுகளை உள்ளடக்கி புதிதாக தேவேந்திர குல வேளாளர் என்கிற பொதுப்பெயர் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு சமுதாய அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வேளாளர் என்ற பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்க எதிர்ப்பு தெரி வித்து ஈரோடு லக்காபுரத்தில் கொமதேகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கொமதேக கொள்கை பரப்புச் செயலாளர் சூரியமூர்த்தி பேசியதாவது:
வேளாளர் என்ற பெயரை வேறு சமுதாயப் பிரிவினர், கடந்த பல ஆண்டுகளாகவே பயன்படுத்தி அடையாளம் பெற்றுள்ளனர். இந்நிலையில், அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திடும் வகையில், புதிதாக வேளாளர் பெயரை வேறு சமுதாயப் பிரிவினரும் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசின் இத்தகைய தவறான முடிவு, சமூக அமைதி கெடுவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, தமிழக அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும், என்றார்.