

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ. இதில், டிச.17 வரை பெய்த மழையளவு 941.81 மி.மீ. தோட்டக்கலை துறையின் மூலம் பரப்பு அதிகரித்தல் திட்டத்தின்கீழ் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மரவள்ளி, மஞ்சள் மற்றும் இதர காய்கறிகள் நிகழாண்டில் 11,558 ஹெக்டேர் பரப்பளவு பயிரிடப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட வெங்காயம், பருத்தி, மக்காச் சோளம் பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசும்போது, ‘‘நீர்நிலைகளின் வரத்து வாய்க்கால்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தியும், பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக முதல் வருடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகளை பேச அனுமதிக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்தும் விவசாயிகள் முழக்கமிட்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் சார் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சி.கருணாநிதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.