

மதுரையில் எய்ட்ஸ் நோயை மறைத்து பெண்ணைத் திருமணம் செய்த நிலையில் கணவரது சொத்துகளை தருவதாக ஏமாற்றிய மாமனார், மாமியார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை வரிச்சியூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (25). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த லட்சுமிபதிராஜன் என்பவருக்கும் கடந்த 2016 செப்டம்பரில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில், கணவருக்கு எய்ட்ஸ் இருப்பது மனைவிக்கு தெரியவந்தது. இதுகுறித்து கணவர் வீட்டாரிடம் புவனேஸ்வரி கேட்டபோது, அவர்கள் கணவரின் சொத்துகளை எழுதித் தருவதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில், கடந்த 2017-ல் லட்சுமிபதிராஜன் தற்கொலை செய்தார். இத்தகவலை அவரது மனைவியிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சொத்துகளையும் தராமல் ஏமாற்றினர். இதுகுறித்து புவனேஸ்வரி மதுரை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி மாமியார் பூமாதேவி (45, மாமனார் சுந்தரராஜ் (52), லட்சுமிபதிராஜனின் மைத்துனர் சந்தானம் (29), அவரது மனைவி நந்தினி (26) ஆகியோர் மீது கருப்பாயூரணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.