

மருத்துவப் படிப்புபோல ஜேஇஇ தேர்விலும், பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சலுகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 496 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நேற்று நடைபெற்றது.
மாநில பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகி யோர் அங்கீகார ஆணைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைக்கான காலத்தை 3 ஆண்டு களில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கட்டிட அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2021 ஜன.15-ம் தேதிக்குள் 7,200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும். அதே போல, 80,000 பள்ளிகளில் கரும் பலகைகள் அகற்றப்பட்டு ஸ்மார்ட் போர்டுகளும், 7,042 பள்ளிகளில் ஸ்மார்ட் லேப்களும் விரைவில் அமைக்கப்படும் என்றார்.
முன்னதாக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேரையும் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், தொடக் கக் கல்வி இணை இயக்குநர் இரா.பாஸ்கரசேதுபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, கே.கே.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் கே.ஏ.செங்கோட் டையன் கூறியது: மருத்துவப் படிப்பு மட்டுமின்றி எதிர்காலத்தில் ஜேஇஇ தேர்வு எழுதவும், பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிகழ் கல்வியாண்டில் 3 முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 50 சதவீத பாடத்திட்டமும், 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு 65 சதவீத பாடத்திட்டமும் நடைபெறும். பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து, கல்வியாளர்கள், மருத்துவக் குழுவினர், பெற்றோர், மாணவர்கள் ஆகியோரது கருத்துகளை அறிந்து, அதன்பிறகு உரிய உத்தரவை முதல்வர் பிறப்பிப்பார் என்றார்.