பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் குளித்த மக்கள்

குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நிற்க வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நிற்க வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடித்து வந்தது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் பிரதான அருவியில் நேற்று காலையில் அருவிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணித்தனர்.

அருவிக்கரையில் சுற்றுலாப் பயணிகள் இடைவெளி விட்டு நிற்க வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அருவிக்கு செல்ல வரிசைப்படுத்தி அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் குளிக்க வந்திருந்தனர். பெண்கள் கூட்டம் குறைவாகவும், ஆண்கள் கூட்டம் அதிகமாகவும் இருந்தது. அருவியில் தண்ணீர் குறைவான அளவில் விழுந்தது. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் குற்றாலம் வியாபாரிகள் கடைகளைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். தென்காசி ஆட்சியர் சமீரன் குற்றாலத்தில் ஆய்வு செய்தார்.

திற்பரப்பு அருவி

ஆனால், திற்பரப்பு அருவி யில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்படவில்லை. இதனால் 9 மாதங்களாக திற்பரப்பு அருவி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன் திற்பரப்பு சுற்றுலா மையத்தை நம்பி வாழ்வாதாரம் பெற்று வந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் தொடர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், கன்னியாகுமரி சூழலியல் பூங்கா, கன்னியாகுமரி கடற்கரை பகுதி மற்றும் மாநகராட்சி, நகராட்சி பூங்காக்களை நேற்று முதல் திறந்து சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, திற்பரப்பு அருவி யில் நேற்று காலை முதல், சமூக இடைவெளியுடன் வரிசையில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டது. 15 பேர் வரை அருவியில் குளித்து விட்டு வந்த பின்னர் மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அருவி நுழை வாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட்டு இருந்தது. இதுவரை, வெறிச்சோடி இருந்த திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள் வருகையால் நேற்று களைகட்டியிருந்தது. வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைப்போல் மார்த்தூர் தொட்டிப்பாலம், பிற சுற்றுலா மையங்களையும் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in