

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தனுர் மாத உற்சவத் துக்கு பருவதமலை மீது ஏறவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் வர வேண்டாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில், “தி.மலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த பருவதமலை உச்சியில் மல்லிகார்ஜுனர் கோயில் மற்றும் கோயில்மாதிமங்கலத்தில் கரைகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில்களில் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம், தனுர் மாத உற்சவம் மற்றும் இதர பவுர்ணமி யில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த விழாக்களில் பிரசித்திப்பெற்ற தனுர் மாத உற்சவம் (மார்கழி மாதம் முதல் தேதி) வரும் 16-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கரைகண்டீஸ்வரர் கோயில் வளாகத்திலேயே இந்தாண்டு தனுர்மாத உற்சவம் நடைபெறும்.
விழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னதானம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கை ஏதும் நடைபெறாது. தனுர் மாத உற்சவத்துக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம். மேலும், பருவதமலை மீது ஏறவும் மற்றும் கிரிவலம் செல்லவும் வர வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.