

வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் வகையில் மதுரை கோரிப்பாளையம் அருகே ரூ.2.5 கோடியில் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை வைகை ஆற்றில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலந்ததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. ஆறு கடுமையாக மாசடைந்தது. மாநகராட்சியால் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கழிவுநீர் கலப்பது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அப்பணி முழுமை பெறவில்லை. இன்னும் சில இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. குறிப்பாக, பந்தல்குடி கால்வாய் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது.
இதைத் தடுக்க கோரிப் பாளையம் அருகே மீனாட்சி மகளிர் கல்லூரியின் பின்புறம் ரூ.2.5 கோடியில் சமூக பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பந்தல்குடி கால்வாயில் வரும் கழிவுநீர், இந்த ராட்சத தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு, தூய்மையான தண்ணீர் ஆற்றில் விடப்படும். இந்த சுத்திகரிப்புத் தொட்டிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.