Published : 13 Dec 2020 03:17 AM
Last Updated : 13 Dec 2020 03:17 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு

பொன்னேரி அரசு பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் கே.சி.வீரமணி.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முகாம்கள் முறையாக நடைபெறுவதை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய வாக்காளர் சேர்க்கை திருத்தம் உள்ளிட்ட சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடங்கின. வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 769 வாக்காளர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 692 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக நவம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெற்றன. தொடர்ந்து, டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கி இன்று (டிச.13) நிறைவு பெறுகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட 6 ஆயிரத்து 754 மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 993 மனுக்கள் பெறப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 338 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார். ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பாச்சல் நடுநிலைப் பள்ளி, பால்நாங்குப்பம் மேல்நிலைப் பள்ளி, வக்கணம்பட்டி நடுநிலைப் பள்ளி, பொன்னேரி மேல்நிலைப் பள்ளி, ஜோலார்பேட்டை நடுநிலைப் பள்ளிகளில் அவர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு வட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு செய்தார். அதேபோல், வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி அருகேயுள்ள தொலைதூர கிராமமான கேசவபுரம், துத்திக்காடு வாக்குச்சசாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x