திமுக இளைஞரணியில் 1.17 லட்சம் பேருக்கு பதவி சட்டப்பேரவை தொகுதி வாரியாக 500 பேர் நியமனம்
234 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் தலா 500 பேர் வீதம் திமுக இளைஞரணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடங்கியது. இதன்படி மதுரை வடக்கு மாவட்ட திமுகவில் 4,501 பேருக்குப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன
2021 தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலைச் சந்திக்க பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதில் திமுக வும் தீவிரம் காட்டி வருகிறது. `ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் 75 நாட்களில் 1,500 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. காணொலிக் காட்சி மூலம் தேர்தல் சிறப்புக் கூட்டத்தை மாவட்ட வாரியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
புதிய மாவட்டங்கள், ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். திமுக தேர்தல் பணியை கவனித்து வரும் ஐபேக் நிறுவனம் மூலம் கட்சியினரிடம் கருத்துக் கேட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 500 பேர் வரையில் நியமனம் நடந்து வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1.17 லட்சம் பேர் இளைஞரணியில் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுகவில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு 4,501 பேரை இளைஞரணியில் நியமித்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்த மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ. பி.மூர்த்தி கூறுகையில், "மாவட்டம், ஒன்றியம், நகராட்சி, பகுதி, வார்டு, பேரூராட்சி, கிராமங்கள் என திமுக கிளைகள் உள்ள அனைத்து இடங்களிலும் இளைஞரணிக்குப் பொறுப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதியில் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள், நகர் மற்றும் ஒன்றியங்களில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 500 பேர் வரையில் இந்தப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையே நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டு வருகிறது. இவர்கள் மூலம் தேர்தல் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும். மேலும் தேர்தல் பணிக் குழுவில் இந்த இளைஞர்களும் நியமிக்கப்படுவர்", என்றார்.
