

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை சந்தித்து வலியுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த2 வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் நாசமடைந்துள்ளன. மத்தியக் குழுவினர் ஒரு கிராமத்தில் இரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர். மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்துள்ளார். சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் என்ற முறையில் எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. அந்தசெலவை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் பயிர் செய்ய முடியும். மேலும் பாதிப்புகளை கணக்கிடும்போது மழையில் மூழ்கியுள்ள பயிர்கள் மட்டுமே கணக்கிடப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லும் முளைத்து சேதமடைந்துள்ளன. அதேபோல் கதிர் வருவதற்கு தயாராக இருக்கும் பயிர்கள் அதிகமழையால் பதராக மாற வாய்ப்புள்ளது. அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம் பகுதியில் மழை காரணமாக நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெசவாளர்கள் பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்புநடத்தி அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
அப்போது காஞ்சிபுரம் திமுக நகரச் செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம், காஞ்சிபுரம் ஒன்றியச் செயலர் பி.எம்.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.