

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி மாதா கோயில் தெருவை சேர்ந்த சத்ரவதி மகன் சின்னதுரை (30). இவர் கடந்த 7.11.2020 அன்று குடும்ப பிரச்சினையால் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான பிச்சைகண்ணு (60) என்பவர் சின்னதுரையை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பிச்சைகண்ணு மற்றும் அவரது தாய் பேச்சியம்மாள் (82), சகோதரர் முருகன் (62) ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர். இந்நிலையில் காயமடைந்த பேச்சியம்மாள் இறந்ததையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சின்னதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பி ஜெயக்குமார் அளித்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதையைடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.