வேர் அழுகல் நோயிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்கும் முறைகள் வேளாண்மைத் துறை விளக்கம்

வேர் அழுகல் நோயிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்கும் முறைகள் வேளாண்மைத் துறை விளக்கம்
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் 87,749 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வேர் அழுகல் நோயால் தென்னைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "வேர் அழுகல் நோயால் காய்களின் எண்ணிக்கையும், தரமும் குறைந்து வருகிறது. இளங்கன்றுகளில் பூக்கும் தருணம் தள்ளிப் போகிறது. ஆரம்பத்தில் 35 சதவீதமும், முற்றிய நிலையில் 85 சதவீதமும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது” என்றனர்.

இந்த நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை துணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி கூறியதாவது:

கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்னையில் வேர் அழுகல் நோய் பாதிப்பு தென்படுகிறது. பைட்டோபிளாஸ்மா என்ற நுண்ணுயிரியால் இந்நோய் உண்டாகிறது. மரத்துக்கு மரம் சென்று சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள் மற்றும் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளால் இந்நோய் பரவுகிறது.

நோய் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தின் கீற்றுகள் கீழ் நோக்கி வளைந்து காணப்படும். நடுவில் உள்ள கீற்றுகள் மஞ்சள் நிறமாக மாறி, ஓரங்கள் கருகி, பின்னர் உதிர்ந்து விடும். குருத்து கருகுதல், மொட்டு உதிர்தல், வேர் அழுகுதல் போன்ற பாதிப்புகள் மரங்களில் காணப்படும்.

குரும்பைகள் கொட்டுதல், மட்டைகள் மற்றும் தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைதல், நீர் மற்றும் தாது உப்புகள் உறிஞ்சும் திறன் குறைந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எண்ணெய் சத்து குறைவதால், திசுக்கள் சுருங்கி விடும்.

இதைக் கட்டுப்படுத்த 10-க்கும் குறைவாக காய்க்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும். இதனால் மரத்துக்கு மரம் பரவுவது தடுக்கப்படும்.

மரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, தொழு உரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, சூடோமோனாஸ் 200 கிராம், யூரியா 1.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் 1 கிலோ என்ற அளவில் மரத்திற்கு இட வேண்டும். வட்டப்பாத்தியில் பசுந்தாள் உரங்களான தட்டைப்பயிர், சணப்பை, கலப்பகோணியம், பியூரேரியா, தக்கைப்பூண்டு ஆகியவற்றை ஏப்ரல், மே மாதங்களில் தென்னந்தோப்புகளில் பயிரிட்டு, பூக்கும் முன் உழுதுவிட வேண்டும்.

வேப்பம் புண்ணாக்கு பவுடர் 250 கிராம், அதே அளவு மணலுடன் கலந்து குருத்து மற்றும் தண்டுகளில் இட வேண்டும். அல்லது டைமீதோபேட் 1.5 மி.லி. மருந்தை, 1 மி.லி. ஒட்டும் திரவத்துடன் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாத இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in