Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்மழையால் 676 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 676 ஏரிகள் நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 528 ஏரிகளும் உள்ளன. இந்த 909 ஏரிகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 437 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

மீதமுள்ள ஏரிகளில் 180 ஏரிகளில் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், 53 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் நீர்வரத்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னேரி, பெரும்புதூர் ஏரி, மணிமங்கலம் ஏரி ஆகிய 3 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி, தையூர் ஏரி, சிறுதாவூர் ஏரி, கொண்டங்கி ஏரி, மானாம்பதி ஏரி, காயார் ஏரி, பி.வி.களத்தூர் ஏரி ஆகிய ஏரிகளும் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, நேற்று மதியம் 2 மணி முதல் விநாடிக்கு ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஏரியின் நீர்இருப்பு தற்போது 3,016 மில்லியன் கனஅடியாக உள்ளது.

பூண்டி ஏரிக்கு நேற்று மதிய நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, உபரிநீர் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் 34.25 கன அடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x