

மதுரை பாலரெங்கா புரத்தில் உலகத் தரத்தில் ரூ.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.
தென் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் புற்றுநோய்க்கு தனி சிகிச்சைப் பிரிவு செயல்படுகிறது.
இங்கு மெமோகிராம், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முதல் சமீபத்தில் வந்த ‘பெட்' ஸ்கேன் வரை புற்றுநோயைத் துல்லியமாக கண்டறிய நவீன கருவிகள் உள்ளன. பெட் ஸ்கேன் மூலம் நோயாளியின் உடலில் இருக்கும் கட்டி புற்றுநோய்க் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பதை அதில் உள்ள செல் வகையைப் பொறுத்து ஆராயக் கூடிய மேம்பட்ட வசதிகள் உள்ளன. கதிரியக்க சிகிச்சைக்கும் தனிப்பிரிவு உள்ளது. தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஆனாலும், புற்றுநோய் சிகிச்சைக்கு தனி மருத்துவமனையும், அதற்கான ஆய்வகமும் அமைய வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மதுரை அருகே பாலரெங்காபுரத்தில் ரூ.30 கோடியில் மண்டலப் புற்றுநோய் மையம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டது. கடந்த 8 மாதத்துக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்குத் தயராக இருந்தது. ஆனால், கரோனா ஊரடங்கால் அதன் செயல்பாடு தடைப்பட்டு கிடந்தது. ஆனாலும், சத்தமில்லாமல் நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் இங்க சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் மதுரை வந்த முதல்வர் கே.பழனிசாமி, மண்டல புற்றுநோய் மையத்தைத் திறந்து வைத்தார்.
ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ சங்குமணி கூறியாதாவது:
இந்த மண்டலப் புற்றுநோய் மையத்தில் சர்வதேச தரத்தில் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு ராஜாஜி மருத்துவ மனை கதிர்வீச்சு துறை மருத்துவ நிபுணர்கள் நோயாளி களுக்கு சிகிச்சை வழங்க உள்ளனர். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. இந்த மண்டலப் புற்றுநோய் மையம், தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும் என்றார்.